திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்பு நீர் ஏரி. வங்காள விரிகுடாவிலிருந்து இந்த ஏரியினை ஸ்ரீஹரிகோட்டா தீவு பிரிக்கிறது. பழவேற்காடு ஏரியின் தெற்கே பழவேற்காடு மீனவ கிராமம் அமைந்திருக்கிறது. பழவேற்காடு ஏரியில் தினமும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்துவருகின்றனர்.
இந்நிலையில், மீனவ கிராம மக்கள் வழக்கம் போல இன்று மீன்பிடிக்கச் சென்றபோது ஏரியில் திடீரென மீன்கள் செத்துமிதந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள், மீன்கள் செத்து மிதந்ததற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தபோது, அருகில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் வேதி கழிவுநீர் ஏரியில் கலந்ததால் மீன்கள் செத்து மடிந்தது என கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து பழவேற்காடு மீனவர்கள் கூறும்போது, ‘கழிவுநீர் ஏரியில் கலக்கப்படுவதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது. அருகில் தொழிற்சாலைகளும், இறால் பண்ணைகளும் உள்ளன. தமிழ்நாடு அரசு ஏரியில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.