தஞ்சாவூர்: தமிழ்நாடு கைத்தறி நெசவுத்தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில குழு கூட்டம் கும்பகோணத்தில் இன்று நடைபெற்றது. சம்மேளனத்தின் மாநில தலைவர் ஜி. மணிமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் எம்.ராதாகிருஷ்ணன், மாநில செயலாளர்கள் சி.சந்திரகுமார், ஆர்.தில்லைவனம், கைத்தறி நெசவாளர் சம்மேளன பொதுச் செயலாளர் என்.கே.ராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இம்மாநில குழு கூட்டத்தில் கைத்தறி தொழிலாளர்கள் நிலமை, எதிர்கால கடமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- கடந்த 11 மாத கால மானிய தொகையை உடன் வழங்கிட வேண்டும்
- நெசவாளர்களுக்கான கூலியை வங்கி மூலம் வழங்குவதால் பெரும் சிரமமும், தொழில் பாதிப்பும் ஏற்படுவதால் அவற்றை ரொக்கமாக வழங்க வேண்டும்.
- கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்
- கைத்தறி நெசவாளர்களுக்கு நல வாரியம் மூலம் வழங்கப்படும் கல்வி, திருமண உதவித்தொகையினை உயர்த்தி வழங்கிட வேண்டும்
- இயற்கை மரண உதவித் தொகையினை ரூபாய் ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கிட வேண்டும்
- கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சார அளவீட்டினை 200 யூனிட்டில் இருந்து 300 ஆக அதிகரிக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாநிலக்குழு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஏஐடியூசி மாநில பொதுச் செயலாளர் என்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், "கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயர்வை வழங்க வேண்டும். அகவிலை படியை கடந்த 6 ஆண்டுகளாக வழங்கவில்லை.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும்; தலைமைச் செயலக சங்கம் கோரிக்கை
உற்பத்தி செய்யப்பட்டு தேங்கியுள்ள கைத்தறி ரகங்களை கொள்முதல் செய்யவும், உரிய தள்ளுபடியுடன் விற்பனை செய்திடவும் அரசு முன்வர வேண்டும். கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் திகோ சில்க்ஸில் மட்டும் சுமார் ரூபாய் நூறு கோடி மதிப்பிலான கைத்தறி பட்டு ரகங்கள் தேங்கியுள்ளன.
கைத்தறி ரகங்களுக்கு மூலப் பொருட்கள் முதல் அது முழுமை பெரும் வரை பல கட்டங்களாக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் கடும் விலை உயர்வு ஏற்படுகிறது. இதனை தடுக்க, தமிழக அரசு, காதி நிறுவன விற்பனைக்கு, ஜிஎஸ்டி வரி விலக்கு பெற்றிருப்பதை போலவே கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ரக விற்பனைக்கு வரி விலக்கு பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்