திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட நில எடுப்பு தாசில்தாராக இருப்பவர் செல்வகுமார். இவர் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரும், திருநெல்வேலி நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக இருந்த சத்யா என்பவரது கணவரும் ஆவார்.
தாசில்தார் செல்வகுமார் கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்து வந்தன. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டு முதற்கட்டமாக, தாசில்தார் செல்வகுமாரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை மாவட்ட வருவாய் அலுவலர் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். செல்வகுமார் முதலில் மறைமுகமாக தனது மனைவிக்கு ஆதரவாக அரசியலில் களம் இறங்கினார்.
இதையும் படிங்க : நெல்லையில் ஆயுதங்களுடன் தாக்கி கொண்ட சிறுவர்கள்; பகீர் கிளப்பும் வீடியோ!
விடுமுறை நாட்களில் மனைவியை அரசியல் கூட்டத்துக்கு அழைத்துச் செல்வது, பிரச்சாரத்துக்கு அழைத்து செல்வது, நாம் தமிழர் நிர்வாகிகளை சந்தித்து பேசுவது என அரசியலில் மறைமுகமாக ஈடுபட்டு வந்துள்ளார். விடுமுறையில் இருப்பதால் உயரதிகாரிகளும் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால், சமீபகாலமாக நேரடியாகவே அரசியல் பணியாற்றியது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் சீமான் பங்கேற்ற கூட்டத்தில் சீமானுக்கு அருகில் செல்வகுமார் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அதேபோல் அடுத்தடுத்து பல கூட்டங்களில் அவர் நேரடியாக கலந்து கொண்டது தெரிய வந்ததால், இந்த விவகாரத்தை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதனடிப்படையில் தற்போது தாசில்தார் செல்வகுமார் மீநு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயனை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கேட்ட் போது, செல்வகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்