திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை அடுத்த தண்டலம் கிராமத்தில் முறையான சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து, அக்கிராம மக்கள் சார்பில் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலை வசதி, பேருந்து வசதி, கூவம் ஆற்றில் பாலம் கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் விக்ரம் நாதன், “தண்டலம் கிராமத்திலிருந்து கடம்பத்தூர் செல்வதற்கு சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் தனியார் விளைநிலத்தின் வழியாக சென்று வந்து கொண்டிருந்தோம். ஆனால், அந்த வழியும் தற்போது எங்களுக்கு அடைக்கப்பட்டுவிட்டது. அரசு உடனடியாக தலையிட்டு சரியான சாலை வசதி செய்து தரவேண்டும்.
மேலும் கடம்பத்தூருக்கும் தண்டலம் கிராமத்திற்கும் இடையே கூவம் ஆற்றில் புதிய பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர், மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் இதே நிலை நீடித்தால், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம்” என்றார்.
இதையும் படிங்க: 'செக்கிங்கைப் பார்த்து தெறித்து ஓடிய கொரிய இளைஞர்' - பையில் இருந்த 4 கிலோ தங்கம்!