திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு பேபி கால்வாய் மூலம் அனுப்பப்படும் நீரை உயர்த்தி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம். 3,231 மில்லியன் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கம், நவம்பர் மாதத்தில் நிவர் புயல், புரெவி புயல் காரணமாக பெய்த மழையால் முழுக் கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.
பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் செம்பரம்பாக்கம், புழல் ஏரிக்கு நீர் கொண்டுச் செல்லப்படுகிறது. ஆனால் சோழவரம் ஏரிக்குச் செல்லும் பேபி கால்வாய் மூலம் தற்போது 50 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு சென்றுகொண்டிருக்கிறது.
இச்சூழலில், பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு நீரை அதிகளவில் கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரிவிட்டதன்பேரில், தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறு சீரமைப்புக் கழகத் தலைவர் சத்தியகோபால், மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து பேபி கால்வாய் வழியாகச் செல்லும் பகுதியில் ஆய்வை மேற்கொண்டனர்.
புயல், வெள்ளம் போன்ற காலங்களில் நீர் இருப்பு பூண்டி நீர்த்தேக்கத்தில் அதிகமாகும்போது, அதனை சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக சோழவரம் ஏரிக்கு அனுப்ப ஏதுவாக கால்வாய் பகுதிகள் சீரமைக்கப்படும் என்றும் ஆக்கிரமிப்புகள் இருந்தால் கட்டாயம் அகற்றப்படும் என்றும் அப்போதுதான் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் சத்தியகோபால் தெரிவித்தார்.