தலைக் கவசம் அணியாமல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என காவல்துறையினர் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமல்லாது பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, காவல்துறையினர் அபராதம் விதிப்பதைத் தவிர்க்க செய்ய வேண்டியது குறித்தும்; வாகன ஓட்டிகள் இடையே டிஎஸ்பி கங்காதரன் பேசினார். அதேபோல் காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும்; விபத்து நேரும்போது உயிரைக் காப்பது குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் கண்ணபிரான் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டியதுடன், தலைக் கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலைக் கவசத்தை வழங்கியும் பிரசாரம் மேற்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் டவுன் காவல் துறை ஆய்வாளர் மகேஸ்வரி மற்றும் செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் பாண்டியன் கலந்து கொண்டனர்.