திருவள்ளூர் மாவட்டத்தில் கரானா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கரோனா சிறப்பு தடுப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன், அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் ஆய்வுக் கூட்டம் நடத்தினர். இதன் பின்னர் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சென்றும் ஆய்வு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பான பணியை மேற்கொண்டுவருகிறது. ஒரு நாளைக்கு 40 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுவருகிறது. இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் 30 கர்ப்பிணிகள், 12 வயதுக்குட்பட்ட நபர்களும் அடங்குவர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆயிரத்து 175 படுக்கை வசதிகள் உள்பட 3 ஆயிரம் படுக்கை வசதிகள் கரோனா நோயாளிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்துள்ளார்.
தற்போது சுமார் 75 கோடி செலவில் செயற்கைக்குழாய் வழியாக ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 310 படுக்கைகளுக்கு நேரடியாக குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 778ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 13 லட்சம் நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 60 பேர் கரோனாவால் உயிரிழப்பு!