திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (72). இவரது மகள் தங்கபாய் ராஜகுமாரி. மூதாட்டி சாந்தகுமாரிக்கு செங்குன்றத்தை அடுத்த அலமாதி பகுதியில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீட்டு மனையும், பூந்தமல்லி குயின்ஸ்லேன்ட் பொழுதுப்போக்கு பூங்கா அருகில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீட்டு மனையும், அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு வீடும் உள்ளன. வேப்பம்பட்டி வீட்டை மகள் தொந்தரவு செய்ததால் அவர் பெயரில் எழுதியும் வைத்துள்ளார்.
கணவர் பிரிந்துசென்றுவிட்ட நிலையில், மூதாட்டி மட்டும் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தருமாறு இவரது மகள் அடிக்கடி தொந்தரவு செய்துவருவதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதியன்று மகள் தங்கபாய் ராஜகுமாரி, அவரது கணவர் லாங்கினாஸ் சாந்தகுமார், அவரது மகன் ஜோசப் ஆகியோர் அடியாட்களுடன் சென்று மூதாட்டியைப் பலமாக தாக்கி, வீட்டில் வைத்திருந்த அனைத்துப் பத்திரங்களையும் அபகரித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மூதாட்டியைக் காரில் ஏற்றிய அவரது மகள், அம்பத்தூரில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு இல்லத்தில் தனது தாய்க்கு மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அவரைப் பராமரிக்கும்படியும் கூறி அங்கு சேர்த்துள்ளார். ஆனால், தனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மூதாட்டி கூறியும் அந்த இல்லத்திலிருந்து அவரை அனுப்ப மறுத்துள்ளனர்.
இதனிடையே, அந்த இல்லத்தில் இருக்கும் தினேஷ், தேவேந்திரன் ஆகிய இருவரும் மூதாட்டியிடம், ”நீ இறந்தால்தான் எங்கள் நண்பன் ஜோசப்புக்கு (மூதாட்டியின் பேரன்) சொத்து கிடைக்கும். அதனால் உனக்கு மெல்ல மெல்ல சாகக் கூடிய மருந்தைக் கொடுத்துவருகிறோம்” என்று கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி செய்வதறியாது தவித்துவந்துள்ளார். இந்நிலையில், செல்போனில் தனது சகோதரிக்கு தொடர்புகொண்டு பேசியுள்ளார். இதையடுத்து அவரது சகோதரி மூதாட்டியை மீட்க இல்லத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், இல்ல நிர்வாகம் 2 லட்சத்து 55 ஆயிரம் பராமரிப்புச் செலவை கொடுத்தால் மட்டுமே மூதாட்டியை அனுப்ப முடியும் என்று கூறிவிட்டதால், ஒரு வாரத்தில் பணத்தைக் கட்டி மூதாட்டியை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், தன் பெயரில் உள்ள சொத்தை மீட்க என்றும், தன்னை சித்ரவதை செய்த தனது மகள் உள்ளிட்டோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனிடம் மூதாட்டி சாந்தகுமாரி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மூதாட்டி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.