திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சுமார் 35 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 17ஆம் தேதி இரவு உடல் நலம் சரியில்லாததால் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர், அப்பெண்ணை பரிசோதனை செய்ததில், வெள்ளை அணுக்கள் அதிக அளவில் உடலில் இருந்து வெளியேறுவதைக் கண்டறிந்துள்ளார். அதற்கான மாத்திரைகளை வழங்கியுள்ளார்.
இந்த மாத்திரையை உட்கொண்ட பெண், சிறிது நேரத்திற்குப் பிறகு கடும் வயிற்று வலியால் துடி துடித்துள்ளார். பின்னர், அங்கிருந்த செவிலி ஒருவர், அப்பெண் சாப்பிட்ட மாத்திரையை காண்பிக்குமாறு கேட்டு, மாத்திரையைப் பார்த்ததும் செவிலி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த மாத்திரைகள் சாப்பிட வேண்டாம், இது காலாவதியான மாத்திரைகள் என்று கூறியுள்ளார். இதனைக் கேட்ட பெண் அதிர்ச்சியில் திகைத்துப்போனார்.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில், அந்த பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகள் உள்ளிட்ட காலாவதியான மாத்திரைகள் அனைத்தையும் அழித்துவிட்டதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் எதுவும் நடக்காது எனவும் உறுதியளித்துள்ளனர்.
இதுபோன்று, அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் காலாவதியான மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுப்பதன் மூலம் பல உயிர்கள் பலியாக வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் காலாவதியான மாத்திரைகளை அழித்துவிடவேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காலாவதியாகாத மருந்து மாத்திரைகள் சாலையோரம் கொட்டப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி!