இன்றைய சூழலில் பெண்களுக்கெதிராக பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் குற்றத்தை கண்டு சமூக வலைதளத்தில் குமுறும் சமூகத்திற்கு மத்தியில் ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றி தன்னுயிரை நீத்துள்ளார் ஒரு இளைஞர். அந்த இளைஞரின் பிறப்பு சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அவரது இறப்பு சரித்திரமாகிவிட்டது.
முன் பின் தெரியாத ஒரு பெண்ணிற்காக உயிரிழந்த இளைஞரை திருவள்ளூர் மாவட்டமே கொண்டாடி தீர்க்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகேயுள்ள கொண்டேன்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏகேஷ். இவர் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்துள்ளார். டிசம்பர் 25ஆம் தேதி இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் சாலையோரத்தில் நின்றபேசிக்கொண்டிருந்தபோது, தன் எதிரே வந்த ஆட்டோவில் ஒரு இளம்பெண் அலறும் சத்தம் அவருக்குக் கேட்டுள்ளது.
சத்தத்தைக் கேட்ட இளைஞர்கள் ஏகேஷ் (22), ஈஸ்டர் (19), வினித், துரை ராஜ், சார்லி ஆகியோர் தங்களது இருசக்கர வாகனங்களில் ஆட்டோவை விரட்டிச் சென்றனர். இதனிடையே ஆட்டோவிலிருந்து இளம்பெண் தப்பி சாலையில் விழுந்தார். இதன்பின்னரும் ஆட்டோவை விரட்டிச் சென்றபோது, ஆட்டோ ஓட்டுநர் ஏகேஷைத் தாக்கி விட்டு தப்பிச் சென்றார். இதில் படுகாயமடைந்த ஏகேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், பெண்ணைக் காப்பாற்ற உயிர்த் தியாகம் செய்த இளைஞர் ஏகேஷ் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் அறிவித்தது. இதனையடுத்து இளைஞரின் குடும்பத்தினர் கண்ணீருடன் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், இச்செய்தியை உடனடியாக வெளியிட்ட ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு, உயிர்த்தியாகம் செய்த இளைஞரின் தாய் மனமுருக நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க:
மதுரையில் ஜல்லிக்கட்டுத் திருவிழா - மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் ரெடி