சென்னை : கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் லாட்டரி மார்ட்டின். இவர் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி மற்றும் கட்டுமானம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், முறையாக வரி செலுத்தவில்லை எனவும் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு இவரது வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, ரூ.400 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை மற்றும் கோயம்புத்தூரில் லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று( நவ 13) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
துடியலூர், வெள்ளை கிணறு பகுதியில் உள்ள மார்டின் இல்லம், மார்டின் குழும அலுவலகம் மற்றும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கதுறை அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : லாட்டரி மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறையினர் ரெய்டு!
தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள மார்ட்டின் வீடு, அவரது மருமகனும், விசிக துணைப் பொதுச் செயலாளருமான ஆதவ் ஆர்ஜுனா வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. 2வது நாளாக தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதால், சோதனை முடிந்த பிறகு கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்