மயிலாடுதுறை: காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி தொடங்கி, முப்பது நாட்கள் நடைபெறும் துலா உற்சவம் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற விழாவாகும். இந்த ஆண்டு ஐப்பசி மாதத்தில் 29 நாட்கள் உள்ள நிலையில் புரட்டாசி மாதம் 31ஆம் தேதி அன்று துலா உற்சவ முதல் தீர்த்தவாரி நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்குப்பின் புரட்டாசி 31 ஆம் தேதி மீண்டும் முதல் தீர்த்தவாரி நடைபெறுவதால் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இன்று விழாவின் 30 நாள் மாயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் இருந்து சுவாமி புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த நிகழ்வானது காவிரியில் மதியம் 1:30 மணி அளவில் நடைபெற்ற நிலையில் காவிரியின் தென்கரையில் மாயூரநாதர், ஐயாரப்பர், துலாக்கட்டம் காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் ஆகிய கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருள செய்யப்பட்டனர். வடக்கு கரையில் வதான்யேஸ்வரர், காசி விஸ்வநாதர் உள்ளிட்ட கோயில்களில் இருந்து பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.
இந்த விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் மடாதிபதி 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் இருக்ககறைகலிலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு கடை முகத்தீர்த்தவாரி நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் காவிரியில் புனித நீராடினர். பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. விழாவை முன்னிட்டு பதுகாப்பு கருதி அதீநவீன கேமரா 32 க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் தாய்-சேய் உயிரிழந்த விவகாரம்: மருத்துவர் பணியிடம் மாற்றம்!
உடைமாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் செல்வதால் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு படையினர் ரப்பர் படகுகளில் ஆழமான பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை நகரம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் சுமார் 300 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த கடைமுக தீர்த்தவாரி நிகழ்வை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேரோட்டம்: இந்நிலையில் இந்த நிகழ்வின் சிகர நிகழ்வான தேரோட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமளரெங்கநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவம் கடந்த நவம்பர் 7ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று கோயிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேரோட்டமானது நடைபெற்றது.
இதில் எம்எல்ஏக்கள் நிவேதாமுருகன், ராஜ்குமார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா, பரிமள ரங்கநாதா என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம்பிடித்து தேரை இழுத்து சென்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.