சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை அரசு உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும்; தேவைப்பட்டால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதற்காக போராட்டம் நடத்தவும் தயார் என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் உயர் சிகிச்சை மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி நேற்று முன்தினம் நோயாளியின் உறவினரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் இன்று மருத்துவர் பாலாஜியை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முத்தரசன் கூறுகையில், ''இந்த சம்பவம் ஒரு துரதிஷ்டமானது. அரசு மருத்துவமனையில் பணி செய்யக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள் பாதுகாக்கப்பட்ட வேண்டும். மிக சிறந்த முறையில் அர்ப்பணிப்போடு சேவையாற்றக்கூடிய சிகிச்சை அரசு மருத்துவமனையில் இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை'' என்றார்.
இதையும் படிங்க: "காமராஜர், நேரு போன்றவர்கள் சர்வாதிகாரிகள்" - சீமான் பேட்டி..!
மேலும், '' மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்கள் மருத்துவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்படி மருத்துவருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்படும். காவல்துறை உரிய சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளார்கள். போதுமான அளவிற்கு சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இருந்தால் தான் சிகிச்சை அளிக்க முடியும்'' என கூறினார்.
தொடர்ந்து பேசியவர், மருத்துவர்கள் செவிலியர்கள் ஆகியோரின் காலியாக இருக்கும் இடங்களை நிரப்ப வேண்டும். மருத்துவர்களிடம் அணுகுமுறை சரியாக இல்லை என்றால் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் வரும் எண்ணிக்கை எப்படி அதிகரிக்க முடியும் என கேள்வி எழுப்பியவர், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஒரு தியாக மனப்பான்மையோடு தான் பணியாற்றி வருகிறார்கள்.
கத்தியை எடுத்தவர்கள் எப்பொழுதும் கத்தி எடுத்த காரணத்தை குறித்து நியாயப்படுத்த தான் பேசுவார்கள். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போதுமான அளவு மருத்துவர்களை நிரப்பப்பட வேண்டும். கடந்த காலத்தை விட தற்போது அதிகப்படியான நோயாளிகள் வருகை இருப்பதால், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட காலி இடங்களை நிரப்ப வேண்டும். இதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேவைப்பட்டால் இதற்காக போராட்டமும் நடத்தப்படும் எனவும் முத்தரசன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்