தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சென்னை அண்ணாநகர் பகுதி மக்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதற்காக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோ. மோகன் சார்பாக திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.
பொதுமக்களுக்காக அமைக்கப்பட்ட இந்த ஆழ்துளை தண்ணீர் நாளடைவில் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "பொதுமக்களுக்கு இலவச குடிநீர் வழங்குவதாகக் கூறி ஆழ்துளை கிணறு அமைத்தனர். ஆனால் நாள்போக்கில் இது வணிகமாக மாறி தனியார் பயன்பாட்டிற்கு 28,000 லிட்டர் முதல் 30,000 லிட்டர் வரை குடிநீர் எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கோ. மோகன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து லாரிகளின் மூலம்தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிகப்படியாக நீர் இங்கு எடுக்கப்படுவதால் நிலத்தடிநீர் குறைந்து 2 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று நாங்கள் குடிநீர் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" என அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர்.