திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் தனியார் இரும்பு உருக்காலை இயங்கி வருகிறது. அங்கு அனல் மின் நிலையங்களுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வரும் தங்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அதனால் 13 தொழிலாளர்களை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொழிற்சாலை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
அதையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சக தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து தொழிலாளர் நலவாரியத்தில் முறையிட்டதால் ஆத்திரமடைந்த தொழிற்சாலை நிர்வாகம், அனைத்து தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்து கதவடைப்பில் ஈடுபட்டது.
இந்நிலையில், பாதிப்படைந்தவர்களில் நான்கு தொழிலாளர்கள் அப்பகுதியில் உள்ள செல்ஃபோன் கோபுரத்தின் மீது ஏறி நின்று பணிநீக்க நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் நந்தகுமார், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில், 13 தொழிலாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் அவர்களை தவிர்த்து மற்ற அனைவர் மீதும் எடுக்கப்பட்ட பணிநீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தார். அதனை ஏற்று மூன்று மணி நேரத்திற்குப் பின் போராட்டத்தை கைவிட்டு நான்கு தொழிலாளர்களும் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.