திருவள்ளூர்: கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலால், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பேரிட்டிவாக்கம் ஊராட்சியின் உப்பரபாளையம் கிராமத்தில் மாண்டஸ் புயலால் அதிகனமழை பெய்துள்ளது.
இதில் கிராமத்தின் அருகில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரி நிரம்பியுள்ளது. இதனால் மக்கள் வாழும் குடியிருப்புக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. ஆனால், தொடர்ந்து ஐந்து நாட்களாகியும் வெள்ளநீர் வெளியேற முடியாமல் உள்ளது. மேலும் முழங்கால் அளவில் நிற்கும் வெள்ளநீரில் இருந்து துர்நாற்றம் வீசி, நோய்த்தொற்று ஏற்படுத்தி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேபோல் கால்நடைகளும் இறந்து வருவதாகவும் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். எனவே, வெள்ளநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ரேஷன் அட்டை மற்றும் ஆதார் அட்டையை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மாண்டஸ் புயலால் காரின் மீது விழுந்த 50 வருட பழமையான மரம்!