திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான காலி மனையில் இருந்த தோட்டத்தில் தீப்பிடித்தது.
தோட்டத்தில் இருந்த மரங்கள் செடிகள் மளமளவென தீப்பிடித்து எரிந்து அருகில் இருந்த வீடுகளில் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது. காற்று வேகமாக அடித்ததால் அருகிலிருந்த குடியிருப்புகளில் புகை சூழ்ந்தது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது தீ மளமளவென எரிந்துகொண்டிருந்தது.
பின்னர் அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் துணைத் தலைவர் செயலாளர் வார்டு உறுப்பினர்கள் அந்த தெருவில் உள்ள பொதுமக்களுடன் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை முற்றிலுமாக அணைத்தனர். பொதுமக்கள் எடுத்த பெரும் முயற்சியினால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பெரிய சேதம் எதுவும் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்புத் துறை அலுவலர் சம்பத் தீயணைப்புத்துறை வரும் வரை பொதுமக்கள் காத்திராமல் உடனடியாக தீயை அணைக்க எடுத்துக்கொண்ட முயற்சியை வெகுவாக பாராட்டினார்.