திருவள்ளூர் அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை பத்திரமாக எடுத்துச் செல்லும் வகையில் மரக்கட்டையால் பேக்கிங் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று 2 மணியளவில் அந்த தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது பணியிலிருந்த தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலையை விட்டு வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீ கொளுந்துவிட்டு வானுயர எரிந்ததால் தீயை அணைக்கும் முயற்சியில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, மறைமலைநகர், திருவள்ளூர் , திருவூர் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகவும், தீ முற்றிலும் அணைந்த பிறகே எவ்வளவு மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமடைந்தன என்பது குறித்த விவரம் தெரியவரும் எனத் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:நெல் பழம் நோயால் விவசாயிகள் வேதனை!