கரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொது மக்களின் அத்தியாவசிய தேவையான பால், மளிகை மற்றும் காய்கறி கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம் என அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த நேரத்திலும் வியாபாரம் நடத்த மாவட்ட நிர்வாகம் வகுத்துள்ள விதிமுறைப்படிதான் நடத்த வேண்டும்.
கடைகளில் கூட்டம் சேரக்கூடாது, ஒரு மீட்டர் தூரம் இடைவெளி விட்டு நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும், ஒரே இடத்தில் கூட்டம் கூடக் கூடாது, அதே நேரத்தில் வணிகர்களும் ஒருவரை அனுப்பிய பின்னரே மற்றொருவரை கடையில் நிற்க வைக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வகுத்துக் கொடுத்துள்ளது.
இதனை வியாபாரிகள் மீறி செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு வந்த தகவலையடுத்து, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சந்தானம், பஜார் வீதியில் இன்று ஆய்வு செய்தார்.அப்போது வியாபாரிகள் விதிமுறை மீறி இயங்குவது தெரிய வந்தது.
இதனால் வியாபாரிகளை நிற்கவைத்து அறிவுரை வழங்கினார். பின்னர் நாளை வரும்போது விதிமீறல் இருந்தால், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், குறிப்பிட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கரோனா வைரஸ் தடுப்பு முறைகளை கையாளுவதில் மக்கள் மிகவும் கவனக்குறைவாக உள்ளனர் ஆகையால் வணிகர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் வகுத்துள்ளது. ஆனால் அதை மீறுவதாக மாவட்ட ஆட்சியர் அளித்த தகவலின் பேரில் இன்று இங்கு வந்து ஆய்வு செய்தேன். தற்போது வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளேன். இதுபோன்ற விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றால், ரூபாய் 25 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன் நகராட்சி சார்பில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றார். இந்த ஆய்வின்போது சுகாதார அலுவலர் செல்வராஜ் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.