திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்தில் சுமார் இரண்டாயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளனர். ஏற்கனவே மழை வெள்ளத்துக்கு பயந்து தங்களது நெற்பயிற்களைப் பாதுகாக்க விவசாயிகள் போராடி வரும் நிலையில், தற்போது புகையான் பூச்சிகளால் விவசாயிகள் கடுமையாக அதிருப்தியடைந்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண் துறை அலுவலருக்கு விவசாயிகள் தகவல் கொடுத்ததை அடுத்து, வேளாண் துறை இணை இயக்குநர் சம்பத்குமார், நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியர்கள் விஜயசாந்தி, மணிமேகலை ஆகியோர் பிஞ்சிவாக்கம் பகுதிக்குச் சென்று பழனி என்ற விவசாயியின் நிலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இப்பூச்சியால் அரிப்பு ஏற்பட்டால் அதற்கு இட வேண்டிய மருந்துகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனைகளையும் வழங்கினர்.
இதுகுறித்து வேளாண் துறை இணை இயக்குநர் சம்பத்குமார் கூறும்போது "புகையான் பூச்சி, நெற்பயிரின் வேரில் உருவாகி, பயிரை மஞ்சள் நிறமாக மாற்றி அளிக்கக்கூடியது. இந்தப் பூச்சிகள் தாக்கினால் 75 விழுக்காடு நெற் பயிர்கள் சேதம் ஆகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
இந்தப் பூச்சிகள் தாக்கும் நெற்பயிரில் உள்ள தண்ணீரை முதல்கட்டமாக வடிய செய்ய வேண்டும். அதன் பின்னர் வேளாண் துறை அல்லது நெல் ஆராய்ச்சி நிலைய அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு பயிரைப் பாதுகாத்து பெருத்த நஷ்டத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.