திருவள்ளூர்: தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை நிரந்தர மையமாக மாற்றி தர விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 3500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவிக்கும் நெல்லுக்கு போதிய விலை கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி செங்குன்றம் பகுதியில் அதிக விலைக்கு விற்று வந்தனர்.
இதனால் இடைத்தரகர்கள் அடைந்த லாபம் அதிகமாக இருந்ததே தவிர, விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வந்தனர். அதன் விளைவாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு இரண்டு நேரடி நெல் கொள்முதல் மையம் விதம் 14 தற்காலிக மையங்கள் அமைக்கப்பட்டு, அங்கு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. பொதுவாக தனியார் நபர்கள் விவசாயிகளிடமிருந்து ஒரு மூட்டை நெல்லுக்கு 250 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை கொள்முதல் செய்கின்றனர். ஆனால் அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஆயிரத்து 450 முதல் ஆயிரத்து 520 வரை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கிராமத்தில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் மையம் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தற்போது இயங்கி வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் மையத்தில், கூவம், பிள்ளையார் குப்பம், கேளம்பாக்கம், கண்ணூர், கல்லமேடு கொண்டேன் சேரி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நெல்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவ்வேளையில் நேரடி நெல் கொள்முதல் மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் எதுவும் இல்லாமல் மேற்கூரை மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நெல் வீணாகும் அச்சம் உள்ளதால் போதிய அளவு விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுவருகிறது. எனவே சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலுள்ள விவசாயிகளின் நலன் கருதி, இங்கு நெல் கொள்முதல் மையத்திற்கு புதிதாக கட்டடம் கட்டித்தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.