திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (39). இவர் சென்ற சில வாரங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளா. பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து மதுரவாயல் வரை சுமார் 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் திருவொற்றியூரை சேர்ந்த சூர்யா (என்ற) கொசுரு சூர்யா(19), நெற்குன்றத்தைச் சேர்ந்த விக்னேஷ் (என்ற) திருட்டு விக்னேஷ்(19), ராமாபுரத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பதிவாகியிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் இவர்கள் கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து ஊரடங்கு நேரத்தில் உல்லாசமாக செலவு செய்து சுற்றி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி போதை வஸ்துக்களை அதிகமாக வாங்கி உபயோகித்து ஊதாரியாக இருந்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 20 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: வீட்டருகே நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு: மூவருக்கு வலைவீச்சு!