திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேரைச் சேர்ந்தவர், திராவிட பாலு. இவர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராகவும், திமுகவின் ஒன்றியச் செயலாளராகவும் இருந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டார்.
இதனையடுத்து திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலு, எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் சத்தியவேலுவின் மகன் புவன்குமார் என்ற விஷால், உயிரிழந்த திராவிட பாலுவின் மகனான முருகன் (42) வீட்டுக்குள் புகுந்துள்ளார்.
அப்போது அவரது அண்ணன் முருகன், அண்ணி ரம்யா (32), பெரியம்மா செல்வி (52), முருகனின் மகன் கருணாநிதி (15) ஆகியோரை இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கிவிட்டு, தப்பி ஓடியுள்ளார். பின்னர் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது தலையில் பலத்த காயமடைந்த ரம்யா, மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த செல்வி, முருகன் மற்றும் கருணாநிதி ஆகிய மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தொடர்ந்து உயிரிழந்த ரம்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பெரியபாளையம் காவல் துறையினர், குடும்ப தகராறு காரணமாக கொலை நடந்ததா, சொத்து தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை செய்துவிட்டு தலைமறைவான புவன்குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் மருத்துவருக்கு தொல்லை.. மெடிக்கல் ரெப் சிக்கியது எப்படி?