திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட அம்பேத்கர் நகர் தொகுதியில், சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள், ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி, கடந்த 50 ஆண்டு காலமாக அரசியல்வாதிகள் முதல் அலுவலர்கள் வரை கோரிக்கை மனு கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்பகுதியில் வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகள், ஒவ்வொரு தேர்தலின்போதும் பட்டா வழங்குவதாக வாக்குறுதி அளிக்கின்றன. ஆனால் இதுவரை பட்டா வழங்கவில்லை. இந்நிலையில், இதனைக் கண்டித்து அம்பேத்கர் நகர் மக்கள், தங்களது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, கடந்த சில தினங்களாக தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் வைத்தபடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மேலும் இதற்கு சம்மந்தப்பட்ட அலுவலர்கள், தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் எனக் கூறி வருகின்றனர். இவர்கள் நடுரோட்டில், ‘தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம்’ என்று பேனர் வைத்திருப்பதால், அவ்வழியாக போகக் கூடிய மக்கள் வியப்பாக அதைப் பார்த்து செல்கின்றனர்.
இந்நிலையில், உடனடியாக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், “தேர்தலை கண்டிப்பாக புறக்கணிப்போம், அது மட்டுமில்லாமல் தேர்தல் பரப்புரை எங்கள் ஊர் பகுதியில் வர விடமாட்டோம்” என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.