திருவள்ளூர்: ஆரம்பாக்கம் அருகே தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ள எளாவூர் நவீன சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு உரிமம் வழங்குவதில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி குமரவேல் தலைமையில், அதிகாலை 3 மணி முதல் காலை 9 மணி வரை (6 மணி நேரம்) லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் வராத பணம் சிக்கியது.
தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்குள் வரும் வாகனங்கள் உரிமம் பெற வேண்டி சமர்ப்பித்த விண்ணப்பங்கள், அதற்கு அளிக்கப்பட்ட பெர்மிட் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்டண தொகை விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டதில், கணக்கில் வராத 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இது குறித்து தொடர்புடைய அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.