திருவள்ளூர்: நீண்ட தூர பணியிட மாறுதல் களையப்பட வேண்டும், அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதவி வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறையின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாகவே ஊராட்சி செயலாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அதிரடியாக பணியிட மாறுதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பணிபுரியும் உதவி வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர், புதன்கிழமை மாலை 6 மணிக்கு மேல் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, மாவட்ட ஆட்சியர் அறையின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர்கள் சிலர் கூறும் போது, “வட்டாட்சியர் பதவியில் மட்டுமே, மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் அல்லது நீண்ட தூரப்பணி மாறுதல் செய்யப்படுவார்கள். ஆனால், தற்போது ஊராட்சி செயலாளர்கள் முதல், வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் என பலருக்கும் நீண்ட தூரப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
இது களையப்பட வேண்டும். மேலும், பணி முகப்பு அடிப்படையில் உதவி வட்டாட்சியர் பணி வழங்கப்படும் வேளையில், மாற்று வழியில் சிலர் அந்த இடத்தைப் பிடித்து விடுவதால் மூப்பு அடைந்தவர்கள் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் கொண்டு, மூப்பு அடிப்படையில் உதவி வட்டாட்சியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், வருவாய்த் துறையில் உள்ள அலுவலக உதவியாளர்கள் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” எனக் கூறினர்.
இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், வேறு ஒரு கூட்டம் நடத்திய மாவட்ட ஆட்சியர் இவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் நீண்ட தூரப் பணியிட மாறுதல்கள் கைவிடப்படலாம் உள்ளிட்ட சில கோரிக்கைகள் மட்டும் மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ரவுடி அடிக் அகமது மகன் ஆசாத் சுட்டுக் கொலை - உமேஷ் பால் கொலை வழக்கில் போலீசார் என்கவுன்டர்!