திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாள்களாகவே விட்டு, விட்டு கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே இந்த புயலை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு வாரந்தோறும் திங்களன்று நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டு, மின்னஞ்சல் மூலம் அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த மழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரை வெளியேற்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மழையால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களிலும் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் ஒரு சில சாலைகளில் மழையால் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் திருவள்ளூர் நகராட்சியில் புங்கத்தூர், அயத்தூர் அத்தேரி குளம், காக்களூர் அன்னைதெரசா நகர், முல்லை நகர், கணபதி நகர், பூங்கா நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக மழையால் பாதிக்கப்படும் திருவள்ளூர் கோட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் 61 இடங்களிலும், பொன்னேரி கோட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆகிய பகுதிகளில் 133 என மொத்தம் 194 இடங்களில் மழை நீர் சூழும் இடங்களாக கண்டறிந்து, அதிகாரிகள் குழுக்கள் அமைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கனமழையால் ஒரு பெண் உயிரிந்ததோடு, 8 பேர் காயமடைந்துள்ளனர். 44 குடிசைகள் பகுதியாகவும், 5 குடிசைகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன. அதேபோல் கால்நடைள் 6 பசுமாடுகளும், 2 எருமை மாடுகளும், 3 கன்றுக்குட்டிகளும், 2 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. மேலும் 8 மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தும், 7 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளன.
மேலும், மாநில நெடுஞ்சாலையில் 29 இடங்களிலும், ஊரக வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் 18 இடங்களில் மழையினால் சேதமடைந்துள்ளன. இதுவரையில் 207 ஏரிகள் நிரம்பியுள்ள நிலையில் மழையால் ஏரிக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த மாவட்டத்தில் பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் கொசஸ்தலையாறு, ஆரணியாறு வடிநில கோட்டங்களில் 574 ஏரிகளும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 572 ஏரிகளும் உள்ளன.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் 207 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் 165 ஏரிகள் 75 சதவீதமும், 347 ஏரிகள் 50 சதவீதமும், 257 ஏரிகளில் 25 சதவீதமும் மற்றும் 170 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் புழல் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், 2 ஆயிரம் கன அடியிலிருந்து 3 ஆயிரம் கன அடியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
மழை அளவு: ஆவடி 278, சோழவரம் 201, பொன்னேரி 183, செங்குன்றம் 167, தாமரைபாக்கம் 163, கும்மிடிப்பூண்டி 153, திருவள்ளூர் 149, ஊத்துக்கோட்டை 148, பூந்தமல்லி 137, ஜமீன்கொரட்டூர் 122, திருத்தணி 116, திருவாலங்காடு 105, பூண்டி 100, பள்ளிப்பட்டு 61, ஆர்.கே.பேட்டை 41 என மொத்தம் 2126 மி.மீட்டரும், சராசரியாக 147.77 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
இதில் ஆவடி, சோழவரம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக அரசால் அமைக்கப்பட்ட தங்குமிடங்களுக்கு வரவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, பழவேற்காடு சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகத்தால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக வெளுத்து வாங்கும் கனமழை!