தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இதையடுத்து, அங்கிகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையா இன்று மாவட்டத்திலுள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவுப் பட்டியலை வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூவிருந்தவல்லி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், மற்றும் திருவொற்றியூர் ஆகிய 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 16 லட்சத்து 73 ஆயிரத்து 293 ஆண் வாக்காளர்கள், 17 லட்சத்து 4 ஆயிரத்து 473 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 33 லட்சத்து 78 ஆயிரத்து 607 வாக்காளர்களும் உள்ளனர்.
அமைக்கப்படவுள்ள 3,622 வாக்குச்சாவடி மையங்களில் அதிகபட்சமாக மாதவரம் தொகுதியில் 4 லட்சத்து 33 ஆயிரத்து 883 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக பொன்னேரி தனி தொகுதியில் 2 லட்சத்து 60 ஆயிரத்து வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் 11 ஆயிரத்து 464 வாக்காளர்கள் புதிதாக இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய வரும் 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளிலும் நேரிடையாக படிவங்களை பூர்த்தி செய்து திருத்தம் செய்து கொள்ளலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 6.10 கோடி வாக்காளர்களைக் கொண்ட தமிழ்நாட்டின் வாக்காளர் வரைவுப் பட்டியல் வெளியீடு