திருவள்ளூர்: பொன்னேரி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக (பொறுப்பு) அனுரத்னா (Dr Anurathna) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மகப்பேறு மருத்துவ பயிற்சிக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மூன்று மாதங்கள் சென்ற நிலையில், மருத்துவர் விஜய்ஆனந்த் பொறுப்பு தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டார்.
மருத்துவர் அனுரத்னா பயிற்சி முடிந்து திரும்பியதும் அவருக்கு தலைமை மருத்துவர் பதவி இல்லை என்றும், மகப்பேறு மருத்துவராக மட்டும் பணி செய்ய மாவட்ட இணை இயக்குநர் சாந்தி கூறியதாகவும் கூறப்படுகிறது.
பழிவாங்கும் நடவடிக்கை
பழிவாங்கும் நடவடிக்கையாக அனுரத்னாவை தலைமை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு அவரைவிட இளைய மருத்துவர் விஜய்ஆனந்த்தை தலைமை பொறுப்பில் பணியமர்த்தியது கண்டிக்கத்தக்க செயல் என சமூக வலைதளங்களில் செய்தி பரவின. இதையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Minister Ma subramaniyan), மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு (Ponneri Government Hospital) நேரில் சென்று இன்று (நவ.23) விசாரணை நடத்தினர்.
அமைச்சர் உத்தரவு
முன்னாள் தலைமை மருத்துவர் அனுரத்னா, தற்போதைய பொறுப்பு தலைமை மருத்துவர் விஜய்ஆனந்த், மாவட்ட இணை இயக்குநர் சாந்தி ஆகியோரிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரச்னை குறித்து விவரமாக கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், " பிரச்னை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவர் அனுரத்னா மீண்டும் பொன்னேரி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவராக செயல்படுவார்" என தெரிவித்தார்.
முன்னதாக மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: No 1 Chief Minister Stalin: 'நான் தான் இந்தியாவின் நம்பர் 1 முதலமைச்சர்' - கோவையில் ஸ்டாலின் பெருமிதம்