அயோத்தி தீர்ப்பு வரும் 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய வளாகத்தில், தங்கும் விடுதி உரிமையாளர்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் ஆகியோர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் கங்காதரன் தலைமை வகித்தார்.
அப்போது பேசிய அவர், “அயோத்தி சம்பந்தமான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு மேற்குறிப்பிட்ட நாள்களுக்குள் வெளியாவதற்கான வாய்ப்புள்ளது. அதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அசம்பாவிதச் சம்பங்களை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் காவல் துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முன்பின் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகப்படும் வகையில் இருக்கும் நபர்கள் ஆகியோர்களுக்கு தங்கும் விடுதிகளில் அறை ஒதுக்கக் கூடாது. மேலும், அது தொடர்பான தகவலை உடனே அந்தந்த பகுதி காவல் நிலையத்திற்கு அளிக்க வேண்டும்.
மேலும், தங்கும் விடுதிகளில் தங்குவோரின் முழு விவரங்களான ஆதார் அட்டை, கைபேசி எண் போன்ற விவரங்களை பெற வேண்டும். அதேபோல், பெட்ரோல் விற்பனை நிலையங்களில், பெட்ரோலை சில்லரையாக பாட்டில்களில் கொடுக்கக் கூடாது” என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அயோத்தியா வழக்கு குறித்து கருத்துகள் வெளியிட வேண்டாம்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுரை