திருவள்ளூர்: தமிழ்நாட்டில் 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில், திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட சக்கரை பொண்டிச்சேரி, பிஞ்சிவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுகவினர் ரூ.4 ஆயிரம் தருவதாக கூறி அதற்காக டோக்கன் வழங்கி, அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை வலியுறுத்துவதாக தகவல் பரவியது. இந்த தகவலின் பேரில் கடம்பத்தூர் ஒன்றிய திமுக செயலாளர் கொண்டஞ்சேரி ரமேஷ் தலைமையில் திமுகவினர் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அதிமுகவினர் டோக்கன் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள், காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி திமுகவினர் திருவள்ளூர் பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் பறக்கும் படையினர், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் முறையாக எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி மறியலையும் கைவிட செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஜனநாயக கடமையாற்றிய மனநலம் பாதித்தோர்!