திருவள்ளூர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் காயல் அஹமது சாலிக்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன.
இதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் யாசின் மௌலானா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட துணைத்தலைவர் ரஹ்மான உசேர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சாமு நாசர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் ஆவடி சாமு நாசர் பேசும்போது, "இஸ்லாம் என்னும் மார்க்கம் எளிமையான மார்க்கம். எப்போதும் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் கடைபிடிக்கும் மார்க்கமாகும். இதுபோன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார். முகம்மது அபூபக்கர் பேசும்போது, "இஸ்லாம் மார்க்கத்தில் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு சமத்துவத்தை மேலோங்கச் செய்கிறது. தற்போது தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சிறப்பான நல்லாட்சி நடைபெறுகிறது.
இந்த ஆட்சி தமிழ்நாட்டில் நீடித்து நிலைக்க வேண்டும். மேலும் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்து திமுக வெற்றி காண வேண்டும்" என்றார். இதைத் தொடர்ந்து ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் இதில் ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாளர் உமர் பாரூக் பன்வாரி, திமுக மாவட்ட பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: உங்களை வரவேற்க வரும் அமமுகவினரை தினகரன் கட்சியை விட்டு நீக்குகிறாரா ? சசிகலாவின் பதில் என்ன?