நடந்த முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திருவள்ளூர் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான பி.வி. ரமணா ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் வேட்புமனு தாக்க செய்த வேட்பாளர் குரு, கரோனா பாதிப்பால் பரப்புரை செய்யவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தணிகாச்சலம் தேர்தல் அலுவலரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், திருவள்ளூர் தொகுதியில் திமுக- அதிமுக நேரடி போட்டியாகக் கருதப்பட்டது. இத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை 29ஆவது சுற்றில் வெளியான முடிவுகளில், திமுக வேட்பாளர் வி.ஜி. ராஜேந்திரன் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 326 வாக்குகளைப் பெற்றார்.
அதிமுக வேட்பாளர் பி.வி. ரமணா 83 ஆயிரத்து 797 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் 22 ஆயிரத்து 29 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார். திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பசுபதி 14 ஆயிரத்து 543 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் குரு 1065 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார். வாக்கு எண்ணும் மையத்தில் பிற்பகலிலிருந்து திமுகவினர் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டவே, அக்கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
அதிமுக வேட்பாளர் ரமணா பிற்பகல் 3 மணியளவில் பாக்கியம் மையத்தை விட்டு தனது ஆதரவாளர்களுடன் சோகத்துடன் வெளியேறினார்.
இதையும் படிங்க:யாருக்கும் டெபாசிட்கூட கிடைக்கலையாம்: ஐ. பெரியசாமி சாதனை வெற்றி!