திருவள்ளூர்: மாவட்டத்திலுள்ள 18 காவல் நிலையங்களுக்கு உட்பட்டு இருக்கும் சிறைச்சாலை நகர் பகுதியில் அமைந்து உள்ள திருவள்ளூர் கிளை சிறைச்சாலையை சிறைத்துறை டிஐஜி முருகேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த ஆய்வின் போது சிறைச் சாலையில் உள்ள பதிவேடுகள் சரி பார்க்கப்பட்டது. தொடர்ந்து குற்றவாளிகள் சரியான முறையில் நடத்தப்படுகிறார்களா என ஆய்வு செய்யப்பட்டது" என்றார்.
மேலும், "குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை உரிய நேரத்தில் வழங்கப்படுகிறதா என்றும் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்றும் சட்ட உதவி வழக்கறிஞர்கள் உரிய நேரத்தில் வந்து செல்கின்றார்களா என்றும் சிறைவாசிகள் காயங்களுடன் வந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டு அதனைப் பதிவு செய்கிறார்களா" என்றும் ஆய்வு மேற்கொண்டதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் சிறைவாசிகளிடம் சிறையில் ஏதாவது குறைகள் உள்ளதா என்றும் கேட்டு அறிந்ததாகவும் அப்பொழுது சிறைவாசிகள் குறைகள் இல்லை என்று கூறினார்கள் என்றும் சிறப்பாக பணிபுரிந்த முதல் நிலை காவலருக்கு இன்று வெகுமதி கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட சிறை அமைக்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுமாவிளங்கையில் ரூபாய் 18 கோடி செலவீனத்தில் புதிய சிறைச்சாலை கட்டப்படும் என தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்வின் போது திருவள்ளூர் கிளை சிறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், முதல் தலைமை காவலர் ஸ்டீபன், முதல் நிலை காவலர் சுந்தர மூர்த்தி, இரண்டாம் நிலை காவலர் வெங்கடேசன், கணேசன், மற்றும் தினேஷ்குமார் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: அடுத்த 2 நாட்கள் ஜாக்கிரதை.. வெப்பநிலை குறித்து அதிர்ச்சி தகவல்!