திருவள்ளூரில் உள்ள பிரசித்திப் பெற்ற வைத்திய வீரராகப் பெருமாள் கோயிலில் மஹாளய அமாவாசை தினத்தன்று, திருவள்ளூர் மட்டுமல்லாது வேலூர், காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், நாளை (செப்டம்பர் 17) மஹாளய அமாவாசை மிகவும் உகந்த தினம் என்பதால் பக்தர்கள் கூடுவதை தவிர்க்கவும், தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க இன்று (செப்டம்பர் 16) பிற்பகல் 12 மணி முதல் நாளை முழுவதும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என்றும், பொது மக்களின் நன்மை கருதி யாரும் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் திருக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.