திருவள்ளூர்: முருகனின் அறுபடை வீடுகளில் சிறந்து விளங்கும் ஐந்தாம் படை என போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் நேற்றைய முன் தினம்(ஆக.07) அஸ்வினி தொடங்கி நேற்று பரணி இன்று ஆடிக் கிருத்திகை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று மாலை சரவண பொய்கை திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் உற்சவமூர்த்தி முருகக்கடவுள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் நாளை மறுதினம் என 3 நாட்கள் இந்த தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்க கவசம், வைர கிரீடம் பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.
இந்த விழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் காவடி சுமந்து வந்து மொட்டை அடித்து சரவணபொய்கை திருக்குளத்தில் நீராடி முருக கடவுளை வழிபடுவதற்கு திருக்கோயில் சார்பாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'நான் ஜெயிலுக்கு போமாட்டேன்' - கோவை கோர்ட்டில் கத்தியை காட்டிய மிரட்டிய நபர்!
பக்தர்கள் காவடி செலுத்த தனி மண்டபம், முடிக் காணிக்கை செலுத்த மற்றும் சிரமம் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ், பாபுநாகன் மற்றும் துணை ஆணையர் விஜயா உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கோயிலில் தரிசிக்க வரும் பக்தர்களைப் பாதுகாக்கும் விதமாக சுமார் 1900 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. அதே போன்று கோயில் மற்றும் திருத்தணி நகரம் சுற்றிலும் சுமார் 400க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களின் நலனை காக்கும் விதமாக 108 அவசர வாகனங்கள் மற்றும் மொபைல் அரசு மருத்துவமனை, காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.