திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்குகிறது.
இக்கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபட்டு செல்கின்றனர்.
வெளியூர், பிற மாநிலங்களிலிருந்து இந்தக்கோயிலுக்கு வரும் பக்தர்களை குறிவைக்கும் இடைத்தரகர்கள், அவர்களிடம் பேசி சிறப்பு தரிசனம் ஏற்பாடு செய்து தருவதாகவும் ஒரு சிலநிமிடங்களில் முருகனை தரிசனம் செய்யலாம் எனக்கூறி ரூ.2 ஆயிரம் முதல்10 ஆயிரம் வரை வசூல் செய்கின்றனர்.
பின் திருக்கோயில் அலுவலர்களுக்கு அதில் குறிப்பிட்ட தொகையை இடைத்தரகர்கள் கொடுத்து ரூ.150 சிறப்பு தரிசனம் சீட்டு வாங்கமால் பக்தர்களை நேராக கோயிலுக்கு அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்து அனுப்புகின்றனர்.
அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களை மலைக்கோயில் வியாபாரிகள் மாட வீதியில் நின்றுக்கொண்டு மலர்கள், பூஜைபொருள்களை கட்டாயம் வாங்க வேண்டும் என்று கூறுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
பணம், சிபாரிசு இருந்தால் மட்டுமே முருகனின் முழு தரிசனம் கிடைக்கும் என்ற நிலையில் திருத்தணி முருகன் கோயிலில் இடைத்தரகர்களின் கைகள் ஒங்கியுள்ளன. தடையின்றி சுவாமி தரிசனம் செய்ய இந்து அறநிலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருத்தணி முருகன் கோயில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்