திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள ஏரியில் கடந்த ஆண்டு 38 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும் பாசனத்திற்காகவும் இந்த ஏரி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சமூக விரோதிகள் சிலர் தாங்கள் ஏற்கனவே ஏரியை ஏலம் எடுத்திருப்பதாக கூறி, பொதுப்பணித்துறையினரின் பராமரிப்பில் உள்ள இந்த ஏரியில் மீன் பிடிப்பதற்காக, சட்டவிரோதமாக மின் மோட்டார் மூலம் ஏரி நீரை வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற சமூக ஆர்வலர் மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் ஆத்திரமடைந்த அந்த மீன்பிடிக்கும்பல், அரவிந்தனை வழிமறித்து தாக்க முயன்றனர்.
மேலும், புகாரை திரும்ப பெறக்கோரியும் அவ்வாறு பெறவில்லையென்றால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அரவிந்த், இதுதொடர்பாக, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு ஒன்றையும் அனுப்பி உள்ளார்.