திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் வாகன சோதனை சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, காட்பாடி பகுதியிலிருந்து ராஜஸ்தான் பதிவெண் கொண்ட மகேந்திரா வேன் வந்துகொண்டிருந்தது.
காவல் துறையினரைக் கண்டு ஓட்டம்
இதையடுத்து காவல் துறையினர் வேனை மடக்கி சோதனை செய்வதற்காக ஆயத்தமான நிலையில், வேனை 100 அடி தூரத்தில் நிறுத்திவிட்டு இரண்டு பேர் அங்கிருந்து தப்பியோடினர். இதனையடுத்து காவல் துறையினர் வேனை பார்த்தபோது, அதில் ஏழு கறவை மாடுகள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்த கறவை மாடுகளை பாலாபுரம் பகுதியிலுள்ள கால்நடை மருத்துவமனையில் சோதனை செய்து, திருவாலங்காட்டில் உள்ள கால்நடைகளை பராமரிக்கும் கோசாலை மையத்தில் கொண்டுபோய் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை எங்கிருந்து கடத்தி வருகிறார்கள்? காவல் துறையினரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தவர்கள் யார்? என்பது குறித்து ஆர்கே பேட்டை காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இருசக்கர வாகன திருட்டு: இளைஞர் கைது'