தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு பிறப்பித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 20ஆம் தேதி முதல் இரவு 10 முதல் அதிகாலை 4 மணிவரை இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல்.24) இரவு 10 மணி முதல் நாளை காலை 4 மணி வரையிலான 30 மணிநேரம் தொடர் முழு ஊரடங்கால் தமிழ்நாடு முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் முழுநேர ஊரடங்கைத் தொடர்ந்து கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டுள்ளன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லாதால் அவை வெறிச்சோடி காணப்படுகின்றன. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விற்பனையங்கள் மட்டும் செயல்படுகின்றன.
ஊரடங்கை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முழு ஊரடங்கைத் தொடர்ந்து திருவள்ளூரில் வணிக நிறுவனங்கள் , திரையரங்குகள், காய்கறிச் சந்தைகள், மீன் இறைச்சிக் கடைகள் , உணவகங்கள் , மளிகைக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. தேவையில்லாமல் விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
அத்தோடு, மாவட்டத்தில் எல்லைகளில் நிரந்திர சோதனைச் சாவடிகள் , தற்காலிக சோதனைச் சாவடிகளில் தடுப்புகள் அமைத்து தீவிரமாக காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.