திருவேற்காடு நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சியின் சுகாதாரப் பிரிவில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கும், வருவாய்ப் பிரிவில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நகராட்சி அலுவலகம் மூடப்பட்டதுடன், இருவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர், உடன் பணியாற்றிய பணியாளர்கள் சிலரையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
கரோனா தொற்றுப் பரவலால் திருவேற்காடு நகராட்சி மூடப்பட்டத்தை அடுத்து, வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு நகராட்சி அலுவலகம் மாற்றப்பட்டது. தொடர்ந்து நகராட்சி அலுவலக வளாகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம் என்பவரை அதேபகுதியை சேர்ந்த நபர் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சி ஊழியர்களின் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதனைக் கண்டித்து திருவேற்காடு நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்க துணைத் தலைவர் ஆல்பர்ட் அருள்ராஜ் தலைமையில், அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக இடைவெளி பின்பற்றி நின்று ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள், குற்றவாளியை கைது செய்து நகராட்சிப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
திருவேற்காடு நகராட்சியில் ஒரே நாளில் நகராட்சி ஊழியர்கள் உள்பட ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தொற்று எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சுகாதார ஆய்வாளரை தாக்கியதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!