திருவள்ளூர்: வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் கட்டமாக 9,600 நபர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடும் நிகழ்வை தொடங்கி வைத்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பென்ஜமின், “முதலமைச்சரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கரோனா தொற்று பாதிப்பு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.
கரோனா நோய்த்தொற்றை போக்க மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சனிக்கிழமை (ஜன.16) தமிழ்நாடு முழுவதும் கோவிட் 19 தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி வளாகம், வெள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி அரசு மருத்துவமனை, நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என 6 மையங்களில் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற முகாமில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பென்ஜமின் கலந்து கொண்டு, காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகளாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டார்.
பின்னர், சுகாதாரத் துறை அலுவலர்களிடம் தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட தகுதியானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதனைப் பார்வையிட்ட அமைச்சர் பென்ஜமின் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏற்கனவே 2 முறை ஒத்திகை நிகழ்ச்சி முடிந்ததும் 20 ஆயிரத்து 430 நபர்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு அதில் 19,600 நபர்களுக்கு முதல் கட்டமாக தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 9,600 நபர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக தடுப்பூசி போடப்படும்” என்றார். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 43 ஆயிர்தது 164 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதாகவும் இதில் 42 ஆயிரத்து 210 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதாகவும், தற்போது 272 நபர்கள் மட்டுமே மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்புக்காக சிகிச்சைப் பெற்றுவருவதகாவும் தெரிவித்த அமைச்சர் பென்ஜமின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் கரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கல்லில் 300 பேருக்கு இன்று கரோனா தடுப்பூசி!