தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பலூனை பறக்கவிட்டு பொதுமக்களிடம் திருவள்ளூர் மாவட்டத் தேர்தல் அலுவலர் பா. பொன்னையா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதன்பின் ஆவடி மாநகராட்சிக்குள்பட்ட நகரப்பகுதிக்குச் சென்ற பொன்னையா அப்போது முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.200 அபராதமாக வசூலித்தார். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அங்கிருந்தவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
பின் கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான ஆவடி 18ஆவது பகுதிக்குச் சென்ற அவர் மருத்துவ அலுவலர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதன்பின் பொன்னையா கூறியதாவது, "மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 30 முதல் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றன.
ஆவடி மாநகராட்சியைப் பொறுத்தவரை 7, 11, 14 ஆகிய வார்டு பகுதிகளில் நோய்த்தொற்று சற்று அதிகமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 16 இடங்களில் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. மருத்துவம், சுகாதாரப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு கிட்டத்தட்ட 90 முதல் 95 விழுக்காடு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கிராமம், நகரப்பகுதிகளைச் சேர்த்து மொத்தமாக தற்பொழுது 304 நபர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சிகிச்சை முடித்து விரைவில் குணமடைந்து செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டுவருகின்றன" என்று கூறினார்.