திருவள்ளூர்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருவள்ளூரில் உள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி. சிதம்பரம், நகரத் தலைவர் சி.பி. மோகன்தாஸ் ஆகியோர் தலைமையிலும், திருவள்ளூர் தொகுதி எம்பி ஜெயக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது, திருவள்ளூரில் எண்ணெய் ஆலை, நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம் ஆகிய மூன்று பகுதிகளில் இயங்கிவரும் பெட்ரோல் சேமிப்பு நிலையங்களின் முன்பு நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எம்பி ஜெயக்குமார், ”மன்மோகன் சிங் ஆட்சியில் கச்சா எண்ணெய் பேரல் 100 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் டீசல் விலை 70 ரூபாய் என விற்கப்பட்டது.
இப்போது கச்சா எண்ணெய் விலை 40 டாலராக குறைந்துள்ளது. ஒன்றிய மோடி அரசு கலால் வரி என்ற பெயரில் 96 ரூபாய்கு பெட்ரோலை விற்பனை செய்கிறது.
பணமதிப்பிழப்பு விவசாயிகளை வஞ்சிக்கும்விதமாக வேளாண் திருத்த மசோதா, புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் எனப் பல்வேறு மக்கள் விரோதச் சட்டங்களை இயற்றி மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்துவருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: 'வடலூர் சத்திய ஞான சபையின் சர்வதேச மையம் விரைவில்' - அமைச்சர் சேகர்பாபு