திருவள்ளூர் மாவட்டம் செஞ்சி பானபாக்கம் கிராமத்தில் பாசூர் அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஜாத்திரை திருவிழாவின்போது இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கிராம பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. கிராமவாசிகள் 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், 50க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், கிராம மக்கள் தங்களை ஊருக்குள் நுழைய விடாமல் கொடுமை செய்வதாகவும், இதனால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் இன்று கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையே, அங்கு வந்த புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துக் கூறினார். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்ததையடுத்து, அந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.