திருவள்ளூர்: திருத்தணி தொகுதி அருகிலுள்ள விளக்கணாம்பூடி புதூர் கிராம மக்கள் ஏற்பாட்டில் காணும் பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 25 ஆண்டுகள் காலமாக இந்த கிராமத்தில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டு காலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த கிராமத்தில் சேவல் சண்டை போட்டி கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியானது இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் பங்கேற்கப் போட்டியாளர்கள், நூற்றுக்கணக்கானோர் இந்த கிராமத்தில் குவிந்துள்ளனர்.
இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் சேவல்களுக்கு மூன்றாவது நாளில் பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் பரிசுக்கோப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சேவல் போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கும், சேவல்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்கின்றனர்.
மேலும் இந்த சேவல் சண்டை போட்டியில் கலந்து கொள்ளும் ஒரு போட்டியாளருக்கு 1200 ரூபாய் போட்டி கட்டணமாக வசூல் செய்கின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் போலீசாரின் கடும் பாதுகாப்புடன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சேவல் சண்டை போட்டியில் ஏதாவது அசம்பாவிதம் அல்லது பிரச்னைகள் ஏற்பட்டால் போட்டிகள் நிறுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவள்ளூரில் மாமியாரை கொன்ற மருமகன் போலீசில் சரண்