திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் ரூபாய் நிவாரணம், 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்படும் என அறிவித்தது.
அதன்படி ஜுன் 3ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாயை முதல் தவணையாகவும், அதனைத் தொடர்ந்து ஜுன் 15ஆம் தேதி இரண்டாவது தவணையாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. அதோடு, கோதுமை, ரவை, உப்பு, மிளகு, சீரகம், டீத்தூள் உள்ளிட்ட 14 வகையானப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்குப்பம் நியாய விலைக்கடையில் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டது.
அந்தப் பொருள்களில் ஒன்றான டீத்தூளை பொதுமக்கள் எடுத்து, உபயோகப்படுத்தியபோது டீ கசப்பாக இருந்துள்ளது. இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அக்கம் பக்கத்திலுள்ள வீட்டிலும் டீத்தூள் பாக்கெட்டை எடுத்து பார்த்தபோது அது காலாவதியானதை கண்டறிந்தனர்.
பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பொருள்கள் காலாவதியானதா, எடை குறைவாக இருக்கிறதா போன்ற எதையும் ஆய்வு செய்யாமல், அரசு விநியோகிப்பது எந்த வகையில் நியாயம் என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை டேக் செய்தனர்.
இந்த புகார் தொடர்பாக கூட்டுறவு துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், நியாவிலைக்கடையில், ஏற்கனவே காலவதியான டீ தூள் பாக்கெட்கள் அகற்றப்படமால் இருந்தது தெரியவந்தது. உடனே அந்த பாக்கெட்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக ஆய்வு அலுவலர் கூறுகையில், அனைத்து நியாவிலைக்கடைகளிலும் ஆய்வு செய்ய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு கூறும் அறிவுரைகளை சரியாக பின்பற்றி ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நியாவிலைக்கடையில், இருக்கும் பொருள்களின் காலவதியாகும் தேதி முடிந்து விட்டால் அதை உடனே திருப்பி அனுப்ப கடை ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இனி இதுபோன்ற தவறுகள் ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு நியாயவிலைக்கடையின் ஆய்வு அலுவலரே பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா...ரூ.75 ஆயிரத்துக்கு விற்பனையான 1 கிலோ டீ தூள்!