பூண்டி சத்தியமூர்த்தி நீர்த் தேக்கத்தைத் தவிர்த்துப் பிற மூன்று நீர்த்தேக்கங்களான புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகள் கடந்த ஐந்து மாதங்களாக வறண்டு கிடந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் புழல் ஏரிக்கு, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 315 கன அடி நீர் நீர்த்தேக்கப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறது. இதன் கொள்ளளவில் தற்போது 27 மில்லியன் கன அடி ஒரே நாளில் உயர்ந்துள்ளது. அதேபோன்று சோழவரம் ஏரியும் நீரின்றி வறண்டு கிடந்தது. தற்போதுவரை நீர்வரத்து விநாடிக்கு 347 கன அடி வருவதால் சோழவரம் ஏரியின் கொள்ளளவு தற்போது 30 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
ஏரியின் பெயர் | மொத்த கொள்ளளவு (அடி) | நீர்வரத்து (கன அடி) | நீர்இருப்பு (அடி) |
பூண்டி சத்தியமூர்த்தி | 140.00 | 2242 | 124.50 |
புழல் | 50.20 | 315 | 23.73 |
சோழவரம் | 65.50 | 347 | 45.26 |
செம்பரம்பாக்கம் | 85.40 | 93 | 61.90 |
செம்பரம்பாக்கம் ஏரி வறண்டு காணப்பட்டு இருந்த நிலையில், நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழைநீரானது விநாடிக்கு 93 கன அடி நீர் வரத்தைக் கொண்டு, 8 மில்லியன் கன அடி கொள்ளளவை எட்டியுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தைப் பொறுத்தமட்டில் வெறும் 13 அடி மட்டுமே நீர்மட்டம் இருந்த நிலையில் தற்போது 19.5 அடி உயரத்தை எட்டி உள்ளது. ஏரிக்கு நேற்று காலை நிலவரப்படி 100 கன அடி தண்ணீர் வந்த நிலையில் தொடர்ந்து சென்றாயன் பாளையம், திருப்பூர், நம் பக்கம், கிருஷ்ணாபுரம், பங்காருபேட்டை, விடையூர், பாண்டு, திருப்பாச்சூர் மற்றும் ஆந்திர மாநிலப் பகுதிகளில் பெய்த மழை மூலம், தற்போது விநாடிக்கு 2242 கன அடி தண்ணீர் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு வந்து அடைகிறது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீர் திறந்துவிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது ஒரே நாளில் பெய்த மழை மூலம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருவதால் சென்னை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பூண்டி நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள நாராயணபுரம், ரங்காபுரம், சித்தேரி, புதிய பார்க்கும் அறிவு உள்ளிட்ட 5 கிராம ஏரிகளில் வனப்பகுதியில் செல்லும் மிகப்பெரிய ஓடைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் புதிதாகக் கட்டப்பட்ட ஆற்றம் பாக்கம் தடுப்பணை நிரம்பி, அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் செல்கிறது.