திருவள்ளூர்: சி.வி.என் சாலையிலுள்ள தனியார் உணவகத்தில் நேற்று இரவு (ஆக. 10) சுமார் 9.45 மணிக்கு உணவு சாப்பிட்டுவிட்டு பெண் ஒருவர் தனது காருக்குச்செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 அடையாளம் தெரியாத நபர்கள், அவரது கழுத்தில் இருந்த 5 சவரன் செயினை பிடித்து இழுத்தனர்.
அப்போது அப்பெண் செயினை இருக்க பிடித்துக்கொண்டதால் சுமார் 3 சவரன் மதிப்புள்ள செயின் மட்டும் இரண்டாக அறுந்து கொள்ளையர்கள் கையில் சிக்கிய நிலையில், அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதில், நிலை தடுமாறி சாலையில் விழுந்த பெண்ணிற்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.
உடனடியாக அப்பெண் இந்தச்சம்பவம் குறித்து திருவள்ளூர் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை செய்ததில் அப்பெண்ணின் பெயர் உமாதேவி என்றும்; சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிஜிஸ்டர் ஆகப் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இவர், தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்குச்சென்றுவிட்டு வரும் வழியில் உணவகத்தில் உணவருந்திவிட்டு வெளியே வந்தபோது, இந்த செயின் பறிப்பு சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுமட்டுமல்லாது திருவள்ளூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போலீஸ் எனக் கூறி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!