திருவள்ளூர்: மிக்ஜாம் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாக கடந்த டிசம்பர் 12ஆம் தேதி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் 6 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னைக்கு வருகை தந்தனர்.
அக்குழுவினர், மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு, இரண்டு குழுக்களாகப் பிரிந்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இரண்டு நாள் நடந்த இந்த ஆய்வின் இரண்டாவது நாளான நேற்று (டிச.13), புழல் மற்றும் சோழவரம் நீர்த்தேக்கம் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட உபரி நீர் வெளியேற்றும் பகுதிகளை ஆய்வு செய்தனர்.
இணை இயக்குநர் ஏ.கே.ஷிவ்கேர் தலைமையில், துணை இயக்குநர் பாவியா பாண்டே, தலைமைப் பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட குழு மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: எண்ணூர் கிரீக் பகுதி எண்ணெய் கசிவு: விரைந்து அகற்றும் பணியில் 75 படகுகள் மற்றும் 4 கல்லி சக்கர் இயந்திரங்கள்
அப்போது, வெள்ள பாதிப்புகளை புகைப்படம் மற்றும் குறும்படம் மூலமாக விளக்கிக் கூறினர். பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பாக பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சேதமடைந்த சாலைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் வண்ணிபாக்கத்தில் உள்ள கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தத்தமஞ்சி பகுதியில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
அப்போது, அப்பகுதி விவசாயிகள் வெள்ள நீரில் மூழ்கி பாதிப்படைந்த தங்களது நெற்பயிர்களைக் கொண்டு வந்து, அதை ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளிடம் காட்டி, தங்களுக்கான உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய குழு அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.
அதேபோல், பழவேற்காட்டு பகுதியில் சேதமடைந்த படகுகள், மீன்பிடி வலைகள் ஆகியவற்றைப் பார்வையிடும்போது, அப்பகுதி மீனவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எடுத்துக் கூறி, அதற்கான உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய வந்த மத்தியக் குழுவினர் தங்களது இரண்டு நாள் ஆய்வுகளை முடித்துள்ள நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆய்வு குறித்து விவரங்களை முன்வைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் வடிகால்கள் சீரமைக்கப்படுவதே வெள்ளப் பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்